கோலாலம்பூர் , ஆக 11 – தேவைகளின் அடிப்படையிலேயே பள்ளிகளுக்கான அரசாங்கத்தின் நிதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்திருக்கிறார். தேசிய பள்ளிகளைவிட தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் கூடுதலான நிதியை பெறுவதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். தங்களது குறிப்பிடத்தக்க தேவைகள் ,முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையிலயே பள்ளிகளுக்கு கூட்டரசு அரசாங்கம் நிதிகளை விநியோகித்து வருவதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பள்ளிக்கும் தனது சொந்த தேவைகளும், முன்னுரிமைகளும் உள்ளன. தேவைகளின் அடிப்படையின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கிடுகள் விநியோகிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட தொகை சீன தொடக்கப் பள்ளிகளுக்கு தேவைப்பட்டால் நாங்கள் அதனை கவனிப்போம், இதே அணுகுமுறைதான் தமிழ் தொடக்கப் பள்ளிகளுக்கான நிதி விவகாரத்திலும் கடைப்பிடிக்கப்படுவதாக பட்லினா கூறினார். மாணவர்கள் சிறந்த கல்வி வசதியை பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் நிதி அவசியம் என்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் நியாயமான வகையில் அமைச்சு பகிர்ந்து வழங்குவதாக அவர் தெரிவித்தார். தேசிய பள்ளிகளைவிட சீனப் பள்ளிகளுக்கு அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கிவருவதால் சீனப் பள்ளிகளின் வசதிகள் சிறப்பாக இருப்பதாக கடந்த மாதம் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் ( Tuan Ibrahim Tuan ) கூறியிருந்தார். பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் அனைத்து நிதிகளும் எங்கிருந்து வந்தாலும் அவை நியாயமாக விநியோக்கப்படுவதை அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் பள்ளிகளை பழுதுபார்ப்பதற்காக 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. அவற்றில் 120 மில்லியன் ரிங்கிட் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டது.