
தாய்லாந்து, ஆக 21 – தாய்லாந்தின் சாலையை துப்புரவு செய்யும் அழகிய பெண் ஊழியராக அழைக்கப்படுகிறார் 27 வயதான பத்தோராமன் தோச்சரோன் எனும் பெண் ஒருவர்.
தான் வேலைக்குச் செல்லும்போது, அழகான ஆடைகள் அணிவதையும், முகத்திற்கு ஒப்பனை இடுவதையும் அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அதோடு அந்த ஒப்பனையோடு தான் செய்யும் வேலை நேரத்தின் இடையே டிக்டோக் சமுக வலைத்தளத்தில் பல காணொளிகளை பதிவு செய்து தனது நாளை அழகாக்கிக் கொள்ளும் இவரை 3 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
வேலைக்காக அவர் முக ஒப்பனை இடுவது குறித்து பலர் அவரை சாடி வந்தாலும், “ஏன் இந்த வேலையை செய்யும்போது நான் அழகாக இருக்கக்கூடாதா? கடுமையாக உழைக்கும் நான் முக ஒப்பனை செய்துக் கொள்வது தவறா? என் மன திருப்திக்காக நான் செய்துக் கொள்கிறேன்” என பதிலடி கொடுக்கிறார் இரண்டு மகன்களுக்கு தாயான இவர்.
ஒரு முறை தனது காணொளிக்கு வந்த “just a sweeper” அதாவது சாலையை சுத்தம் செய்பவர்தானே என கருத்து பதிவிட்ட நபருக்கு இவர் கொடுத்த பதில் காணொளி மென்மேலும் பலர் இவரை யாரென்று திருப்பி பார்க்க வைத்தது.
“ எனது குறிக்கோல் அழகாக இருப்பது, வாழ்க்கையை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பு எப்பொழுதெல்லாம் கிடைக்கிறதோ அதனை பயன்படுத்துக் கொள்ளலாமே. என் பெற்றோர்கள் இருவருமே இந்த வேலையை செய்துதான் என்னை வளர்த்தார்கள். அந்த வேலையை நான் செய்வதில் பெருமைக் கொள்கிறேன்” என்று அவர் பேசியிருந்தார். அதனை இதுவரை 3.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
துப்புரவு பணிக்காக 12,000 பாத் அதாவது கிட்டதட்ட 1500 ரிங்கிட் எடுக்கும் பத்தோராமன், சமூக வலைத்தளத்தில் மூலம் சுமார் 50,000 பாத் அதாவது 6500 ரிங்கிட் வரை பணம் ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.