
பேங்கோக், செப்டம்பர் -4, தாய்லாந்தில் அண்ணன் வளர்த்து வந்த 2 American Bully நாய்களுடன் ஆசையாய் விளையாடச் சென்ற 18 வயது தம்பியை, நாய்கள் கடித்துக் குதறியதில், அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
கிராமத்திலுள்ள தாயை கவனித்து கொள்வதற்காக, பேங்கோக்கில் தான் வளர்த்து வந்த 3 நாய்களுடன் ஒரு வாரத்திற்கு முன்பு தான் அண்ணன் கிளம்பி வந்துள்ளான்.
இந்நிலையில் இரண்டாவது மாடி அறையில் அண்ணன் பூட்டி வைத்திருந்த நாய்களுடன் Adisak விளையாடச் சென்றுள்ளான்.
எனினும் 2 நாய்கள் அவனைத் தாக்கத் தொடங்கியதால், அவன் கீழ் மாடிக்கு ஓடி வந்தது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
‘வெறி’ பிடித்த நாய்களிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடிய Adisak, 12 மணி நேரங்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
அதே வீட்டிலிருந்த தாய் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
நாய்கள் கடித்துக் குதறிய போது மகனைக் காப்பாற்ற போராடியதாகவும், ஆனால் அது முடியாமல் போய் விட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.
தம்பிக்கு நேர்ந்த கதி குறித்து பேசிய அண்ணன் Apisit, American Bully ரக நாய்களை எப்படி பாதுகாப்பாகக் கையாள வேண்டுமென்பதை அவன் அறிந்திருக்கவில்லை என்றார்.
அதோடு, தான் வீட்டில் இல்லாததால் நாய்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆக்ரோஷமாக நடந்துகொண்டிருக்கக் கூடுமென Apisit கூறினார்.