பேங்கோக், அக்டோபர்-2, தாய்லாந்து சாலைகளில் பத்தாண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக, தலைநகர் பேங்கோக்கில் இரண்டடுக்கு பேருந்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி மாணவர்கள் உட்பட குறைந்தது 23 பேர் பலியாயினர்.
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்திற்கு பேருந்தின் டயர் வெடித்ததே காரணம் என்பது CCTV கேமரா பதிவின் மூலமாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் வாயிலாகவும் கண்டறியப்பட்டது.
டயர் வெடிப்பால் கிளம்பியத் தீப்பொறிகள் எரிவாயு டாங்கியில் பட்டதால் தீ வேகமாகப் பரவி முழு பேருந்தையே நாசமாக்கியதாக, தாய்லாந்து போலீசின் இடைக்காலத் தலைவர் சொன்னார்.
கல்விச் சுற்றுலாவுக்காக 39 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் ஆகியோரை ஏற்றியிருந்த அப்பேருந்து வட தாய்லாந்துக்குத் திரும்பும் வழியில் பேங்கோக் நகர நெடுஞ்சாலையில் தீப்பிடித்தது.
தீ ஏற்பட்டதும் அங்கிருந்து தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை போலீஸ் தேடி வருகிறது.
3 ஆசிரியர்கள் மற்றும் 20 மாணவர்களின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில் அச்சம்பவம் எந்த ஒளிவுமறைவின்றி விரிவாக விசாரிக்கப்படுமெனக் கூறிய தாய்லாந்து போலீஸ், கவனக்குறைவு நிகழ்ந்தது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றது.