பேங்கோக், நவம்பர்-19 – கூண்டிலிருந்து கூட்டமாக வெளியேறிய 200-க்கும் மேற்பட்ட குரங்குகளின் அட்டகாசத்தால், மத்திய தாய்லாந்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையமே கலவரமாகியுள்ளது.
Lophuri நகரில் சமயச் சடங்குகளின் ஒரு பகுதியாக 40 ஆண்டுகளாகவே குரங்குகளுக்கான பழ விருந்து நடைபெற்று வருகிறது.
இதனால் அடிக்கடி வந்துபோகும் இடமாக அதனை மாற்றிக் கொண்ட குரங்குகள், காலப்போக்கில் மூர்க்கத்தனமாக பொருட்களைச் சேதப்படுத்தியும் மனிதர்களைத் தாக்கியும் அப்பகுதி மக்களுக்கு தொந்தரவாக இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் அவற்றைப் பிடிப்பதற்கு அதிகாரத் தரப்பு சிறப்புக் கூண்டுகளை கட்டியிருந்தது.
ஆனால் சனிக்கிழமை நடந்த சம்பவத்தில், அவை எப்படியோ கூண்டுகளிலிருந்து தப்பி உணவுத் தேடி நகருக்குள் புகுந்து விட்டன.
உள்ளூர் போலீஸ் நிலையத்தையும் அவை விட்டு வைக்கவில்லை.
அந்த அழையா விருந்தாளிகளின் வருகையை எதிர்பார்க்காத போலீசார், கட்டடத்தின் கதவுகளையும் கண்ணாடிகளையும் உள்ளிருந்தவாறு மூடி விட்டனர்.
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குரங்குகளை விரட்டியடிக்க போக்குவரத்து போலீசாரும் வெளியில் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசாரும் வரவழக்கைப்பட்டனர்.
அப்படியும் பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் திங்கட்கிழமை வரை போலீஸ் நிலையத்தை விட்டுச் செல்லாமல் அதன் கூரைகளிலும் சுவர்களிலும் சுற்றிக் கொண்டிருந்தன.