பேங்காக், மே 11 – தாய்லாந்தில் வெப்ப நிலை மோசமாகி 52 செல்சியஸ் டிகிரியை தாண்டியதால் இதுவரை 61 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெப்பத்தில் இறந்தவர்களைவிட இவ்வாண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகமாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பகுதியாக இருந்துவரும் வட கிழக்கு பகுதியில் கடும் வெப்ப நிலை காரணமாக கூடுதலானோர் இறந்துள்ளனர்.
அண்மைய வாரங்களாக பேங்காக் மற்றும் தாய்லாந்தில் பல பகுதிகளில் வெப்ப நிலை 30 செல்சியஸ் டிகிரிக்கும் அதிகமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. வெளி நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளும்படி மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பல மாதங்களுக்குப் பிறகு இம்மாத தொடக்கத்தில் முதல் முறையாக தாய்லாந்தில் மழை பெய்தது. இதனால் வெப்ப அளவு தொடக்கத்தில் குறைந்தபோதிலும் பின்னர் 30 செல்சியஸ் டிகிரிக்கும் மேலாக வெப்ப நிலை அதிகரித்தது.