சராபுரி, ஜனவரி-10, மத்திய தாய்லாந்து மாநிலமான சராபுரியில் வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த நாயே எஜமானரைத் தாக்கியதில், 84 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காந்தி (Khanthi) என அடையாளம் கூறப்பட்ட அப்பெரியவர், வீட்டின் கழிவறை அருகே படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
அவரின் வலது கை முட்டி துண்டாகி காணாமல் போயிருந்தது; ஒருவேளை நாயே அதனை கடித்துத் தின்றிருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது.
போலீஸ் வந்த போது, சடலமருகே மூங்கில் கம்பில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த கருப்பு நிற Thai-Pitbull கலப்பின நாய் ஆக்ரோஷமாக குரைத்துக் கொண்டிருந்தது.
Black எனும் அந்நாயை, குட்டியாக இருக்கும் போதிலிருந்தே, தனது தந்தை பாசத்தோடு வளர்த்து வந்ததாகவும், கடைசியில் அதுவே உயிருக்கு உலையாக அமையுமென தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், முதியவரின் மகன் கூறினார்.
இவ்வேளையில், நீண்ட நேரத்திற்கு சங்கிலியால் கட்டிப் போடப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் நாய் நிதானம் தவறியிருக்கலாமென போலீஸ் நம்புகிறது.
முதியவரின் மரணத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய சடலம் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.