
பேங்கோக், ஏப்ரல்-6- தாய்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான கேளிக்கைப் பூங்காவில், பொது கழிவறையில் உள்ளே ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது, வெளியே பெண்கள் தங்கள் தலைமுடி மற்றும் ஒப்பனையை சரிசெய்வதைப் பார்க்க அனுமதிக்கும் இருவழி கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது, தனியுரிமை மற்றும் பாலின பாகுபாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
மார்ச் 20-ஆம் தேதி, 3.7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஓர் இணையப் பயனர், Dream World Bangkok-கில் உள்ள அந்த ஆண்கள் கழிப்பறையில் பயன்படுத்தப்படும் இருவழி கண்ணாடியை வீடியோ வாயிலாகப் பகிர்ந்த பிறகே இது வைரலானது.
இருவழி கண்ணாடிகள் பெரும்பாலும் ஒரு மெல்லிய உலோக பூச்சைப் பயன்படுத்துகின்றன; இதனால் பிரகாசமான பக்கம் வழக்கமான கண்ணாடியாகத் தோன்றும்; இதன் மூலம் இருண்ட பக்கத்தில் உள்ளவர்கள் அதில் பார்க்க முடியும். இது பொதுவாக விசாரணை அறைகள் போன்ற அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், மக்கள் கூடும் ஒரு பொது இடத்தில் அதுவும் கழிவறையில் இருவழி கண்ணாடி நிறுவப்பட்டிருப்பது தான் ஆச்சரியத்தையும் கண்டனங்களையும் வரவழைத்துள்ளது. பார்ப்பதற்கு ஒரு சாதாரண கண்ணாடியைப் போலவே இது தோன்றுகிறது.
இதனால், சந்தேகத்திற்கு இடமில்லாத பல பெண் வழிப்போக்கர்கள் கண்ணாடியைப் பார்த்ததும் நின்று, தங்கள் தலைமுடி மற்றும் ஒப்பனையைச் சரிபார்க்கின்றனர்.
பெண்கள் அவ்வாறு தங்கள் தோற்றத்தை சரிசெய்வதை, உள்ளே 2 ஆண்கள் கழிப்பறைக்குள் சிறுநீர் கழித்துக் கொண்டே சிரிப்புடன் பார்க்கும் புகைப்படமும் வைரலாகியுள்ளது.
சமூக ஊடகத்தில் சர்ச்சையானாலும், இந்த வடிவமைப்பு “அனைவருக்கும் ஒரு வேடிக்கையான அனுபவத்தை” வழங்கும் நோக்கம் கொண்டது என பூங்காவின் செயல்பாட்டு இயக்குனர் சொல்லி சிரிக்கிறார்.
“உள்ளே இருப்பவர்கள் வெளியே பார்க்க முடியும், அதே நேரத்தில் வெளியே செல்வோர் தங்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஒரு கண்ணாடி மட்டுமே; அவர்களால் உள்ளே நடப்பவற்றைப் பார்க்க முடியாது,” என அவர் கூறினார்.
வைரலாகியுள்ள இந்த வீடியோ, இதுவரை 13.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 36,000 க்கும் மேற்பட்ட likes-களையும் பெற்றுள்ளது.
ஆனால் வலைத்தளவாசிகள் இந்த நடைமுறையை “அருவருப்பானது” “தொந்தரவானது” என கண்டித்துள்ளனர்.