தாய்லாந்து சரணாலயத்தில் ‘பீதியடைந்த’ யானைத் தாக்கி ஸ்பெயின் சுற்றுப் பயணி பலி
பேங்கோக், ஜனவரி-6 – தென் தாய்லாந்தில் யானைகள் சரணாலயத்தில் யானையொன்றைக் குளிப்பாட்டும் போது அது திடீரென பீதியடைந்து தாக்கியதில், ஸ்பெயின் சுற்றுப் பயணி பலியானார்.
யானையின் தும்பிக்கை பலமாகப் பட்டதில் 23 வயது அப்பெண் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அச்சம்பம குறித்து சரணாலயம் கருத்துரைக்க மறுத்து விட்டது.
தாய்லாந்து வனவிலங்குப் பாதுகாப்பு, தேசியப் பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பாதுகாப்புத் துறையின் தரவுகளின் படி, கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுப் பயணிகள் உட்பட 227 பேரை காட்டு யானைகள் கொன்றிருக்கின்றன.
கடந்த மாதம் கூட வட தாய்லாந்தில் உள்ள தேசியப் பூங்காவில் 49 வயது மாதுவை யானை மிதித்துக் கொன்றது.
காட்டு யானைகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையிலான மோதல்கள் வழக்கமான ஒன்று தான் என்றாலும், யானைகள் சரணாலயத்தில் மனிதர்கள் மீதான தாக்குதல்கள் மிக மிக அரிதாகும்.
தாய்லாந்தில் யானைகளைக் குளிப்பாட்டுவது சுற்றுப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.
நாடளாவிய நிலையில் சுமார் 2,800 யானைகள் சுற்றுலா நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், யானைகளைக் குளிப்பாட்டும் செயல் அவற்றுக்கு துன்பத்தை ஏற்படுத்தலாமென விலங்குகள் நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
சில சரணாலயங்களில் யானைகளைக் குளிப்பாட்ட அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.