
கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 23 – கடந்த ஞாயிற்றுகிழமை, திடீரென பிரேக்கை அழுத்தியதால், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கீழே விழ காரணமான, காரோட்டி ஒருவருக்கு இரண்டு நாள் சிறைத் தண்டனையும், ஆறாயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
26 வயது லிம் சிங் ஹாங் எனும் அவ்வாடவர், தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
லிம் இன்று தொடங்கி இரு நாட்களுக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அவரது வாகனமோட்டும் அனுமதியை ஐந்தாண்டுகளுக்கு தடை செய்யயும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே சமயம், அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவர் மூன்று மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட்டு 20-ஆம் தேதி, காலை மணி 9.19 வாக்கில், தலைநகர், சையிட் புத்ரா சாலையில், அபாயகரமான முறையில் செலுத்தப்பட்டதோடு, திடீரென பிரேக்கை அழுத்தியதால் Lexus கார் ஒன்றின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிளோட்டி அக்காரை மோதி விழுந்து விபத்துக்குள்ளான காணொளி ஒன்று வைரலாகி, இணைய வாசிகளின் கடும் கண்டனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.