
பினாங்கு, ஏப் 28 – உணவுத் தொழிலில் எத்திலீன் ஆக்சைடை ஒரு புகைப் பொருளாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு பி.ப.ச எனப்படும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுகாதார அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது. புற்றுநோயைத் தூண்டும் பொருளான எத்திலீன் ஆக்சைடைக் கொண்ட இரண்டு வகையான திடீர் மீ வகைகளில் எத்திலின் ஆக்சைடு ரசாயனம் இருந்ததை தைவான் சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளதை பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் சுட்டிக்காட்டினார்.
எத்திலீன் ஆக்சைட்டின் நச்சுத்தன்மை மற்றும் மலேசிய சந்தையில் உணவுப் பொருட்களில் அடிக்கடி நிகழும் நிகழ்வைக் கருத்தில் கொண்டு இந்த நச்சு மீது சுகாதார அமைச்சு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் முகைதீன் வலியுறுத்தினார். உணவுத் தொழிலில் எத்திலீன் ஆக்சைடை ஒரு புகைப்பொருளாகப் பயன்படுத்துவதைத் தடைசெய்யப்பட வேண்டும். எத்திலீன் ஆக்சைடு உள்ளதா என பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் உணவுப் பொருட்களைச் தொடர்ச்சியாக சோதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.