திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 36 பேர் பலி; இந்தியா, நேப்பாள் வரையில் நில அதிர்வு
காட்மண்டு, ஜனவரி-7 – திபெத்தின் இரண்டாவது பெரிய நகரான Shigatse-வை வலுவான நில நடுக்கம் உலுக்கியதில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
68 பேர் காயமடைந்துள்ளனர்; அவ்வெண்ணிக்கை மேலும் உயரலாமென அஞ்சப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.05 மணிக்கு ரிக்டர் அளவைக் கருவியில் 6.8-டாக அந்நிலநடுக்கம் பதிவாகியது.
இதில் ஏராளமான கட்டடங்களும் இருப்பிடங்களும் தரைமட்டமாகின.
பூகம்பத்துக்குப் பிறகு தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
400 கிலோ மீட்டர் தாண்டி வட இந்திய மாநிலமான பீகார், நேப்பாள் தலைநகர் காட்மண்டு வரையிலும் அந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியில் ஓடும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
எவரெஸ் மலை உச்சிக்கு அருகே இமயமலையின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
எனினும் சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை.