கெமமான், ஏப்ரல் 22 – திரங்கானு, கெமமான், பாடாங் குபு தேசியப் பள்ளியில், பெண் ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அதே பள்ளியை சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு மணி ஒன்பது வாக்கில், ஆசிரியர் குடியிருப்பு ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்ட அந்த 49 வயது நபர், கெமமான் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை, மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹன்யான் ரம்லான் உறுதிப்படுத்தினார்.
அந்நபரை தடுத்து வைக்க, இன்று நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படுமெனவும் ஹன்யான் சொன்னார்.
முன்னதாக, நேற்று காலை மணி 6.55 வாக்கில், பள்ளியின் சிற்றுச்சாலை பகுதியில், ஆங்கிலம் கற்பிக்கும் 32 வயது பெண் ஆசிரியை, சந்தேக நபரால் அடித்து உதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
அதனால், இடது கண்ணில் காயமடைந்த அப்பெண் ஆசிரியர், காலை மணி 8.20 வாக்கில் அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.