அம்பாங், டிசம்பர்-4 – 2 தினங்களுக்கு முன்னர் தங்கக் கட்டி ATM இயந்திரத்தை மறைத்து வைத்த குற்றச்சாட்டை, லாரி ஓட்டுநர் ஒருவர் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
காணாமல் போன Public Gold நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த தங்கக்கட்டி ATM இயந்திரத்தை, டிசம்பர் 2-ம் தேதி காஜாங், புக்கிட் அங்காட் தொழில்பேட்டையில் ஓரிடத்தில் தெரிந்தே மறைத்து வைத்ததாக, 41 வயது Loh Kian Luck, அம்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், 3,500 ரிங்கிட் தொகையில் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவரை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், அடுத்தாண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றது.
நவம்பர் 23-ஆம் தேதி ஒரு லாரியையே கொண்டு வந்து தாமான் பெர்மாத்தாவில் அந்த ATM இயந்திரத்தை களவாடிச் சென்றதன் பேரில், ஒரு பதின்ம வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் முன்னதாகக் கைதாகினர்.
எனினும், அவர்கள் திருடுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாகத் தான் தங்கக்கட்டிகளை அதிகாரிகள் காலியாக்கியதால், அம்மூவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
தங்கங்கட்டிகள் இல்லையென்றாலும், ATM இயந்திரம் கொள்ளையிடப்பட்டதில் 60,000 ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளது.