புது டெல்லி, அக்டோபர்-1, திருப்பதி லட்டு விவகாரத்தில் இதுவரை எதுவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்தது ஏன் என, ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு கலப்படம் குறித்த ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை.
ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் தான் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டது என்பதும் அதில் குறிப்பிடப்படவில்லை.
அப்படியிருக்க, முதல் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் எதற்காக அவ்விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பக்தர்களின் உணர்வைப் பாதிக்கும் வகையில் இது போன்ற சர்ச்சைக்குரிய அறிக்கைகளை மாநில அரசு வெளியிட்டது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு கடுமையாக எச்சரித்தது.
நீதிமன்றத்தின் கண்டத்துக்கு சந்திர பாபு தரப்பிலிருந்து இதுவரை பதிலேதும் வரவில்லை.
ஆனால், அவர் தலைமை வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி, லட்டு விஷயத்தில் எங்களின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
முந்தைய ஆட்சியில் விலங்குகளின் கொழுப்பில் தான் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதென்பதில் உறுதியாக உள்ளோம் என அக்கட்சியின் பேச்சாளர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.