ஜியோர்ஜ்டவுன், ஏப்ரல்-30 – ஐந்தாண்டுகளுக்கு முன் 653.38 கிராம் எடையிலான போதைப் பொருளை வைத்திருந்தக் குற்றத்திற்காக, முன்னாள் பகுதி நேர குத்தகைத் தொழிலாளி ஒருவர் மரண தண்டனை விதிக்கப்படுவதில் இருந்து தப்பினார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, 30 வயது அந்நபருக்கு பினாங்கு, ஜியோர்ஜ்டவுன் உயர்நீதிமன்ற நீதிபதி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தார்.
4.85 கிராம் எடையிலான Methamphetamine வகைப் போதைப் பொருளை வைத்திருந்ததாகக் கொண்டு வரப்பட்ட கூடுதல் குற்றச்சாட்டுக்காக, அவ்வாடவருக்கு மேலும் ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவ்விருக் குற்றங்களுக்குமான சிறைத் தண்டனை, அவர் கைதான நாளான 2019, ஏப்ரல் 13-ஆம் தேதியில் இருந்து அமுலுக்கு வருவதாக நீதிபதி அறிவித்தார்.
அதே குற்றத்தைப் புரிந்ததாக அவ்வாடவருடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்ட அவரின் 30 வயது மனைவியை, நீதிமன்றம் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து விடுதலைச் செய்தது.
தனது கட்சிக்காரர் கைதான போது, அவருக்குத் திருமணமாகி வெறும் 19 நாட்களே ஆகியிருந்தது; அதோடு 5 ஆண்டுகள் தடுப்புக் காவலையும் அவர் இப்போது நிறைவுச் செய்து விட்டதால், திருந்தி மீண்டும் சமூகத்தின் அரவணைப்பில் செல்ல நீதிமன்றம் அவருக்கு வாய்ப்புத் தர வண்டும் என அவரின் வழக்கறிஞர் முறையிட்டார்.
எனினும் மற்றவர்களுக்கும் நல்லதொரு பாடமாக இருக்க வேண்டி, கடும் தண்டனையை வழங்குமாறு அரசு தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட நிலையில், நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.