Latestமலேசியா

தேசிய அளவிலான, 2023 அனைத்துலக மனநல தினக் கொண்டாட்டம்

கோலாலம்பூர், நவம்பர் 9 – தேசிய நிலையிலான, 2023 அனைத்துலக மனநல தினக் கொண்டாட்டத்தை, சுகாதார அமைச்சு வெற்றிகரமாக கொண்டாடியது. “மனநல ஆரோக்கியம் அனைவரின் உரிமை, களங்கப்படாதீர்கள்,” எனும் கருப்பொருளில், கடந்த ஞாயிற்றுகிழமை, டமான்சாராவிலுள்ள, Centre Court The Curve பேரங்காடியில், இவ்வாண்டுக்கான அனைத்துலக மனநல தினம் கொண்டாடப்பட்டது .

மனநலப் பாதிப்பு உலகளாவிய பிரச்சனையாக கருதப்படுகிறது. அது சுகாதார துறையின் மாபெரும் சவாலாகவும் உருவெடுத்துள்ளதாக, அந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்து உரையாற்றிய, சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்தார். உலகளாவிய நிலையில், மனநல பாதிப்புக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு அதாவது, ஒரு கோடி பேராக அதிகரித்துள்ளதாக, WHO – உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

காலை மணி ஏழு வாக்கில் தொடங்கிய அந்நிகழ்ச்சியில், சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செனாம் மிண்டா உடற்பயிற்சியில் பங்கேற்றனர். அதோடு, அன்றைய நாள் நெடுகிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டி விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

மலேசியர்களிடையே, மனநலம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க, பல்வேறு தளங்கள் வாயிலாக, “மனநல ஆரோக்கியம் அனைவரின் உரிமை, களங்கப்படாதீர்கள்” இயக்கத்தையும் அந்நிகழ்ச்சியின் போது அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்த தவறான கண்ணோட்டத்தை களையவும், குழப்பத்திற்கு தீர்வுக் காணவும், மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென, அமைச்சர் தெரிவித்தார். மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கும் மக்களின் போக்கையும், தவறான கண்ணோட்டத்தையும் களையும் வகையில் அந்த கருப்பொருள் அறிமுகம் கண்டுள்ளது.

 

சுகாதார துணையமைச்சர் டத்தோ லுக்மான் அவாங் செளனி, சுகாதார அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் முஹமட் ரட்சி அபு ஹசான், சுகாதார அமைச்சின் பொது சுகாதார பிரிவின் துணைத் தலைமை இயக்குனரும், 2023 அனைத்துலக மனநல தினக் கொண்டாட்ட செயற்குழுவின் ஆலோசகருமான டத்தோ டாக்டர் நோர்ஹயாத்தி சுஸ்லி, NCEMH – தேசிய மனநல பராமரிப்பு மையத்தின் தலைவரும்,2023 அனைத்துலக மனநல தினக் கொண்டாட்ட செயற்குழுவின் தலைவருமான டாக்டர் நூரசிகின் இப்ராஹிம் உட்பட சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், மாநில சுகாதார இயக்குனர்கள், அமைச்சின் மூத்த பணியாளர்கள், சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள், பங்காளிகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

NCEMH – தேசிய மனநல பராமரிப்பு மையத்தின் காணொளி ஒன்றும் அந்நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பப்பட்டது. 2019-ஆம் ஆண்டு, காஷன் மற்றும் தேசிய நோயற்றவர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஐந்து லட்சம் மலேசியர்கள் மன அழுதத்தால் பாதிக்கப்பட்டுல்லனர் என தெரிவிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதே ஆய்வில் நான்கு பதின்ம வயதினரில், ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளை ; எண்மரில் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டுமெனவும், பத்தில் ஒருவர் அதற்கு முயற்சி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

அந்த தரவு பதற்றத்தை அளிப்பதாகவும், மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வுக் காண, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் டாக்டர் சலிஹா கேட்டுக் கொண்டார். நாடு முழுவதும், நான்கு மனநல கழகங்கள், 62 மனநல மருத்துவமனைகள், 34 MENTARI மனநல காப்பகங்கள், ஒரு தாதியர் மன்நல பராமரிப்பு இல்லம், 1080 சுகாதார கிளினிக்குகள் ஆகியவற்றை அமைத்தது ஆகியவை அதில் அடங்கும்.

அதே சமயம், அரசாங்கம் – தனியார் – அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பு வாயிலாக மனநலம் தொடர்பான கொள்கைகளை சுகாதார அமைச்சு வலுப்படுத்தி வருகிறது.மனநல பிரச்சனைகளை கையாளும் அதிகாரிகளின் திறமை அல்லது நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில், அந்நிகழ்ச்சியின் போது, தற்கொலையை தடுக்கும் பயிற்சி திட்டங்கள் அறிமுகம் கண்டன.

அதோடு, தற்கொலையை தூண்டும் செயல்களை சித்தரிக்கும் குறும் காணொளி தயாரிக்கும் பொட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அந்நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.முஹமட் டானியல் அடாம் அயூப் என்பவர் ஆயிரம் ரிங்கிட் ரொக்கமான முதல் பரிசை வென்ற வேளை ; இரண்டாவது பரிசான 700 ரிங்கிட்டை டாது முஹமட் ரசிடியும், மூன்றாவது பரிசுத் தொகையான 500 ரிங்கிட்டை முஹமட் எல்ட்ரே மிகால் முஹமட் ராபி தட்டிச் சென்றார். மாலையில், கலைநிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி நிறைவைப்பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!