
கோலாலம்பூர், நவ 21 – திரெங்கானுவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றிரவு 8 மணி வரை மழை தொடர்ந்து பெய்ததைத் தொடர்ந்து திரெங்கானு மாநிலத்தில் 1,070 பேர் வெளியேற்றப்பட்டனர். குவாலா நெருஸ் மாவட்டத்தில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 564 பேர் ஏழு நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். கோலா திரெங்கானுவில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 496 பேர் செட்டியுவில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என திரெங்கான மாநில வெள்ள பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திரெங்கானு மாநிலங்களில் உள்ள பல ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து அபாய கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே பேரா மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைந்துள்ளது. அங்கு இன்னமும் 22 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் மட்டுமே நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.