கோலதிரங்கானு, பிப் 26- திரெங்கானுவில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி பெய்துவரும் தொடர் மழையால், அங்கு வெள்ள நிலவரம் மோசமடைந்து வருகின்றது.
அம்மாநிலத்தின் முக்கிய 10 ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்திருக்கின்றது. இன்று காலை 10 மணி வரையிலான நிலவரப்படி, கிட்டதட்ட 10 ஆறுகளின் நீர் மட்டம் அபாயகட்டத்தை எட்டியிருப்பதாக திரெங்கானு நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்புத் துறை தனது அகப்பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 772 குடும்பங்களைச் சேர்ந்த கிட்டதட்ட 2,563 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இம்முறை ஏற்பட்டிருக்கும் இந்த வடகிழக்கு பருவமழை மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.