ஜோர்ஜ் டவுன், நவ 27 – தீபாவளிக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்குவது குறித்து மாநில அரசாங்கம் ஆராயும் என பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் கூறியிருப்பதை அம்மாநில ம.இ.காவின் தலைவர் டத்தோ ஜெ. திகனரன் வரவேற்றுள்ளார். நேற்று பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தில், தீபகற்பத்தின் 1951ஆம் ஆண்டின் விடுமுறை சட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகைக்காக இரு நாள் விடுமுறையை மாநில அரசாங்க பதிவேட்டில் வெளியிடுவது குறித்து ஆராய்வதற்கு மாநில அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தார். இது உண்மையிலேயே இனிப்பான செய்தியாக இருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தினகரன் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து முக்கிய பண்டிகைகளுக்கும் இரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. அரசாங்க பதிவேட்டிலும் இது இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பெருநாளுக்குமட்டும் ஒரு நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவதால் இந்துக்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்புவது சிரமாக உள்ளது. தீபாவளிக்கு இரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ம.இ.கா உட்பட இந்தியர்களை பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற இயக்கங்களும் நீண்ட நாட்களாக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் நேற்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் குமரன் எழுப்பிய கேள்விக்கு முதல் அமைச்சர் சௌ வழங்குகியிருக்கும் சாதகமான பதில் பினாங்கில் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கிடைக்கும் என்ற புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக தினகரன் தெரிவித்தார்.