
கோலாலம்பூர், அக் 25 – எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு, நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கூடுதல் விடுமுறை பெற்றுத் தரும்படி மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் மற்றும் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த விடுமுறை நாளை மீண்டும் நிறைவு செய்யும் வகையில், பிறிதொரு நாளில் தங்களது வகுப்புகளை பள்ளிகள் நடத்திக் கொள்ளும் என்று மலேசியத் தேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மன்றத் தலைவர் திரு. எஸ். எஸ் பாண்டியன் விக்னேஸ்வரன் மற்றும் சரவணன் ஆகியோரிடம் மனு ஒன்றினை வழங்கினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூலமாக கல்வி அமைச்சுடன் பேச்சு நடத்தி இந்த விடுமுறையை பெற்றுத்தரும்படி விக்னேஸ்வரன் மற்றும் சரவணன் ஆகியோரிடம் சமர்ப்பித்த மனுவில் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மஇகாவைச் சேர்ந்த எம்ஐஇடி மற்றும் கோப்பிராசி டீடேக் கூட்டுறவுக் கழகம் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்த கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின்போது, கோப் டீடேக் செயலாளர் டான்ஸ்ரீ கோ. இராஜு தலைமையில், எம்ஐஇடியின் செயல்முறை அதிகாரி மும்தாஜ் பேகம், கோப் டீடேக் இயக்குனர்களான டத்தோ வி.எஸ். மோகன், சிவசுப்ரமணியம், தலைமையாசியர் மன்றத்தின் சார்பில் திரு. எஸ். எஸ். பாண்டியன், மன்றச் செயலாளர் திரு. தமிழரசன், பொருளார் மோகன், மலேசிய இந்திய தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர் திரு. அர்ஜுனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.