கோத்தா பாரு, அக் 15 – தீபாவளி விடுமுறைக் காலத்தில் தென் தாய்லாந்திற்கு விடுமுறை செல்வதற்கு திட்டமிட்டுள்ள மலேசியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இம்மாதம் 9 மற்றும் 10ஆகிய தேதிகளில் தென் தாய்லாந்து பிரதேசத்தில் ஏழு தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளதால் தாய்லாந்து எல்லைக்கு செல்வோர் மிகவும் கவனமாக இருக்கும்படி போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் உசேய்ன் ( Razarudin Husain ) வலியுறுத்தினார். தென் தாய்லாந்து வட்டாரத்தின் ஆகக்கடைசியான மேம்பாடு விவகாரத்தில் மலேசியர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அவர் அறைகூவல் விடுத்தார்.
எதிர்வரும் தீபாவளி விடுமுறையின்போது அதிமான மலேசியர்கள் தென் தாய்லாந்திற்கு செல்வார்கள் என தாம் நம்புவதாகவும் சாத்தியமான வகையில் தாக்குதலில் சம்பந்தப்படுவோர் இலக்காக கொண்டுள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி மலேசியர்களுக்கு தாம் ஆலோசனை கூறுவதாக ரசாருடின் தெரிவித்தார். மலேசியர்கள் தாங்கள் வருகை புரியவிருக்கும் நாட்டின் நடப்பு விவகாரங்கள் குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சர்ச்சைக்குரிய நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதற்கு திட்டமிடுவதற்கு முன் அந்நாடு தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.