
ஜொகூர் பாரு, செப் 14 – ஜொகூர் பாரு, ஜாலான் சென்யும், கம்புங் வாடி ஹனாவில் கடை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் மரணம் அடைந்த வேளையில் ஏழு வயது சிறுமி உட்பட அவரது மூன்று பிள்ளைகள் சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விடியற்காலை மணி 4.53 அளவில் அந்த தீ விபத்து குறித்து அவசர அழைப்பை பெற்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மூத்த ஆணையர் முகமது ஃபைஸ் தெரிவித்தார். மூன்று கடை வீடுகள் சம்பந்தப்பட்ட தீவிபத்து ஏற்பட்டட பகுதிக்கு 13 தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 49 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் கூறினார். அந்த மூன்று கடைவீடுகளும் 65 விழுக்காடு முதல் 90 விழுக்காடுவரை அழிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
எரிந்துகொண்டிருந்த கடை வீட்டிலுள்ள அறையில் சிக்கிக்கொண்ட நால்வர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். எனினும் மீட்கப்பட்ட 53 வயது பெண் ஒருவர் சுவாசிக்க முடியாமல் சுல்தானா அமினா மருத்துவமனையில் இறந்தார் என முகமது ஃபைஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளான 21 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களும் 7 வயது சிறுமியும் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.