வாஷிங்டன், ஆகஸ்ட்-7, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் கமலா ஹாரிஸ், தனது துணையதிபர் வேட்பாளராக மின்னசோட்டா (Minneosota) மாநில ஆளுநர் டிம் வால்ஸை (Tim Walz) தேர்ந்தெடுத்துள்ளார்.
60 வயது டிம் வால்ஸ், இராணுவ அதிகாரியாக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி தற்போது கவர்னராக உள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க – ஆசிய துணையதிபர் என்ற பெருமைக்குரிய கமலா, தனது துணையதிபர் வேட்பாளராக எப்படியும் அமெரிக்க வெள்ளையரையே தேர்ந்தெடுப்பார் என பரலாக எதிர்ப்பார்க்கப்பட்டது.
அப்போது தான், குடியரசு கட்சியின் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) இனவாதத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியுமென அரசியல் ஆய்வாளர்களும் கூறியிருந்தனர்.
அதற்கேற்பவே வெள்ளையரை அதுவும் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காத அனுபவசாலியான டிம் வால்ஸை துணையதிபர் வேட்பாளராக அறிவித்து முதல் ‘சோதனையை’ கமலா தாண்டியுள்ளார்.
கமலாவும் – டிம் வால்சும் காலம் தாழ்த்தாமல் இன்றே தங்களின் 5 நாள் தீவிர பிரச்சாரங்களை பென்சில்வேனியா (Pennsylvania) உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தொடங்குகின்றனர்.
அதிபர் தேர்தலுக்கான ஐனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ நியமனத்தை உறுதிச் செய்துக் கொண்டுள்ள கமலா ஹாரிஸ், இன்னும் 2 வாரங்களில் சிக்காகோவில் நடைபெறவிருக்கும் தேசியப் பேராளர் மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.