Latestமலேசியா

துன் சாமிவேலு காலமானார்

கோலாலம்பூர், செப் 15 – மஇகாவின் நீண்ட கால ஆளுமை மிக்கத் தலைவராகவும், மலேசிய அமைச்சரவையில் தன்னிகரற்ற அமைச்சராகவும் வலம் வந்த துன் சாமிவேலு , தமது 86-வது வயதில் இன்று காலமானார் .

அவரது இறுதி மூச்சு தூக்கத்திலே பிரிந்ததாக அவரது குடும்ப உறுப்பினர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

தமது அரசியல் பேச்சுகளால் பலரைக் கட்டிப் போட்டவரும், தமது நகைச்சுவை உணர்வால் சிரிக்க வைத்தவருமான துன் சாமிவேலு, 1979- ஆம் ஆண்டிலிருந்து 2010 -ஆம் ஆண்டு வரை , 31 ஆண்டுகள் மஇகாவை ஆளுமைத்தன்மையுடன் வழிநடத்தினார்.

அத்துடன் 29 ஆண்டுகள், நீண்ட காலம் அமைச்சரவையில் இருந்து சேவையாற்றியவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

நாடாளுமன்றம், மக்கள் மேடை, பேட்டி ஆகியவற்றில் தன்னுடைய பன்முக அரசியல் பேச்சுக்களால் நாட்டின் எல்லா இனத்தவரிடமும் மிக அறிமுகமான அரசியல்வாதியாகவும் இருந்தவர் துன் சாமிவேலு.

1983 -ஆம் ஆண்டிலிருந்து 1989 -ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் மீண்டும் 1995- ஆம் ஆண்டிலிருந்து 2008 -ஆம் ஆண்டு வரையிலும் பொதுப் பணி அமைச்சராக துன் சாமிவேலு சேவையாற்றியுள்ளார்.

மேலும், 1974 -ஆம் ஆண்டிலிருந்து 2008- ஆம் ஆண்டு வரை Sungai Siput நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவற்றுடன், இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வியே பக்கபலம் என வலியுறுத்தி, இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் செலுத்தி அதற்கான சீரிய முயற்சிகளில் இறங்கியவர் துன் சாமிவேலு.

அவரது முயற்சியில் உருவாகி, இன்று பலரது மருத்துவராகும் கனவை நனவாக்கி வரும் ஏய்ம்ஸ்ட் பக்லைக்கழகம் அதில் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அரசியலில் மிகப் பெரிய ஆளுமையைக் கொண்டவராக திகழ்ந்த துன் சாமிவேலுவின் பங்களிப்புகள் என்றும் நினைவுகூறப்படும் .

அதேசமயத்தில் அவரின் மறைவு மலேசிய அரசியலில் மிகப் பெரிய இழப்பு என அரசியல் தலைவர்கள் தங்கள் அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, மறைந்த துன் சாமிவேலுவின்  நல்லுடக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்பும் மக்கள், இன்று மதியம் மணி 2 தொடங்கி, ஜாலான் ஈப்போவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம்.

அவரது நல்லுடல்,  நாளை செப்டம்பர் 16-ஆம் தேதி , இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு செராஸ்- சில் உள்ள DBKL மின் சுடலையில் தகனம் செய்யப்படுமென , அவரது முன்னாள் ஊடக செயலாளர் டத்தோ சிவபாலன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!