கோலாலம்பூர், நவ 13 – முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் காலமானதை தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , டாக்டர் மகாதீர் உட்பட பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர். நாட்டின் நிதியமைச்சராக இருந்தபோது டைய்ம் ஆற்றிய பங்கை அரசாங்கம் எப்போதும் மதிக்கும் என தற்போது பெருவில் இருக்கும் அன்வார் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார். டைய்ம் மறைவிற்காக நாடாளுமன்றத்திலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அம்னோவின் முன்னாள் தலைமை பொருளாளருமான டைய்ம் பெட்டாலிங் ஜெயா அசுந்தா மருத்துவமனையில் இன்று காலை இறந்தார்.
அவரது உடல் காலை மணி 11.30 அளவில் புக்கிட் துங்குவிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி அஸ்மா அலி ஆகியோரும் இன்று நண்பகல் மணி 12.50 டாய்ம் வீட்டிற்கு வருகை புரிந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். டாய்ம் மறைவு குறித்து தாம் துயரத்தில் இருப்பதால் பேசுவதற்கு வார்த்தையின்றி இருப்பதாக மகாதீர் கூறினார். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசோப், எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், மூவார் எம்.பி சைட் சாடிக், பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தகியுடின் ஹசான், மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பெசால் வான் அகமட் ஆகியோரும் டைய்ம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை மணி 3.15 அளவில் டாய்ம் நல்லுடல் சிறப்பு தொழுகைக்காக மஸ்ஜிட் விலாயா பள்ளிவாசலுக்கு கொண்டுச் செல்லப்பட்டு பிறகு புக்கிட் கியாரா இஸ்லமிய மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.