
கோத்தா பாரு, ஏப்ரல்-7- கிளந்தான் தும்பாட்டில் மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் wheelie சாகசம் புரிந்தபோது, எதிர் திசையில் வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளோடு மோதி, 2 பதின்ம வயது பையன்கள் பலியாயினர்.
சனிக்கிழமை இரவு ஜாலான் கூத்தானில் அக்கோர விபத்து நிகழ்ந்தது. முறையே 16, 17 வயதுடைய அவ்விருவரும் சம்பவத்தின் போது பாசீர் பெக்கானிலிருந்து பாசீர் மாஸ் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது முன்னே சென்ற காரை முந்திச் செல்லும் முயற்சியில் wheelie சாகசத்தில் அவர்கள் ஈடுபட்டனர். துரதிஷ்டவசமாக, அவர்களின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர் திசையில் போய் விழுந்து, 53 வயது ஆடவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளோடு மோதியது.
இதனால் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சடலங்கள் சவப்பரிசோதனைக்காக தும்பாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிக்கு காலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.