தும்பாட், டிசம்பர்-15,கிளந்தான், தும்பாட், கம்போங் நெச்சாங்கில் உள்ள வயல்வெளியில் வெள்ளிக்கிழமை மாலை 3 மீட்டர் நீளமுள்ள முதலை தென்பட்டது.
வெள்ளத்தின் போது, அருகிலுள்ள ஆற்றிலிருந்து அது வந்திருக்கலாமென நம்பப்படுகிறது.
அப்பகுதியில் தற்செயலாக வெள்ள நீர் மட்டத்தை கண்காணித்து கொண்டிருந்த தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடம் விரைந்த அக்குழுவினர், 10 நிமிடங்கள் போராடி சுங்கை பெங்காலான் நங்கா ஆற்றுக்கு முதலையை விரட்டியடித்தனர்.
முதல் முறையாக அப்பகுதியில் முதலை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.
இந்நிலையில், வெள்ளமேற்படும் பகுதிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள், இந்த மழைக்காலத்தில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் குறித்து சற்று கவனமாக இருக்கும்படி தீயணைப்பு-மீட்புக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.