
மெக்சிக்கோ, செப் 6 – பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று துயரத்தில் முடிந்துள்ளது. மெக்சிக்கோவில் விரைவில் பிறக்கவிருக்கும் தங்களின் குழந்தையின் பாலினத்தை அனைவருக்கும் அறிவிக்க நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர் தம்பதியர் ஒருவர்.
அதற்காக ஒரு சிறு ரக விமானத்தை வாடகைக்கு எடுத்து, அதில் வர்ண புகையை வெளியிட்டு அதன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிமுகப்படுத்தவது அத்தம்பதியரின் திட்டமாகும். அந்த விமானத்தை இயக்க விமானி ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, நிகழ்ச்சி பாதியில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், பறந்துச் சென்ற அவ்விமானம் இளஞ்சிவப்பு புகையை வெளியிட்டது. அனைவரும் குதூகலதில் இருந்த சமயத்தில், யாரும் எதிர்பாரா நேரம் அவ்விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 32 வயதான விமானி உயிரிழந்தார். அருகில் இருந்த மரத்தில் மோதுவதிலிருந்து தவிர்க்க முற்பட்டபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.