நியூ யோர்க், அக்டோபர்-10 – அமெரிக்காவின் சியாட்டல் (Seattle) நகரிலிருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் (Istanbul) பயணமான விமானத்தின் கேப்டன் நடுவானில் மரணமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த Turkish Airlines விமானம் நியூ யோர்க்கில் அவசரமாகத் தரையிறங்கியது.
செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில், ஈச்செஹின் பெஹ்லிவான் (İlçehin Pehlivan) எனும் 59 வயது விமானி, நடுவானில் திடீரென சுயநினைவை இழந்தார்.
அவருக்கு உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டும் நினைவு திரும்பாததால், துணை விமானி நியூ யோர்க்கில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவுச் செய்தார்.
விமானம் தரையிறங்குவதற்குள் கேப்டனின் உயிர் பிரிந்தது.
2007-ஆம் ஆண்டு முதல் Turkish Airlines-சில் பணிபுரிந்து வரும் பெஹ்லிவானுக்கு, கடமையாற்ற முடியாத அளவுக்கு உடல் நலப் பிரச்னை எதுவுமில்லை என ஏற்கனவே உறுதிச் செய்யப்பட்ட நிலையில், அவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
இவ்வேளையில், இஸ்தான்புல்லுக்கான பயணத்தைத் தொடருவதற்கு உரிய ஏற்பாடுகளை Turkish Airlines மேற்கொண்டு வருகிறது.