
பினாங்கு , ஜூன் 4 – போலீஸ் கண்காணிப்பில் இருந்து வந்த வினோத் என்ற 31 வயது நபரை நள்ளிரவில் எழுப்பி அவரை தாக்கியதோடு நெற்றியில் துப்பாக்கி வைத்து காரணம் இன்றி மிரட்டிய மூன்று போலீஸ்காரர்ககளின் நடவடிக்கையை மலேசியன் தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வினோத் நேற்றிரவு பினாங்கு ஜாலான் பட்டானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் . கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போலீஸ் கண்காணிப்பில் இருந்துவந்ந வினோத்தை திடீரென எழுப்பி அவரை தாக்கிய போலீஸ் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என டேவிட் மார்ஷல் தெரிவித்தார். இம்மாதம் ஜூன் 1ஆம் தேதி தமது வாடகை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மூன்று போலீஸ்காரர்கள் தம்மை தாக்கியதாக வினோத் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
கோலா மூடா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கார்ப்ரால் ஒருவர் அடையாளக் கார்டை கேட்டதோடு காரணமின்றி தம்மை மடடுமின்றி தமது காதலியையும் மற்றொரு நபரையும் துப்பாக்கியினால் மிரட்டியதாக வினோத் தெரிவித்துள்ளார். அவர்கள் தம்மை தாக்கியதால் முகம், மூக்கு மற்றும் உடலில் பல இடங்களில் காயத்திற்கு உள்ளானதோடு வினோத் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு கோலா மூடா போலீஸ் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தம்மை தாக்குவதை நிறுத்திய அவர்கள் தவறுதலாக தாக்கியதாக கூறி சுங்கைப் பட்டாணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்களுக் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தமது போலீஸ் புகாரில் வினோத் கூறியுள்ளார். தமது காலில் மின்னியல் கண்காணிப்பு கருவி போடப்பட்டுள்ளது குறித்து தாம் சுட்டிக்காட்டியபோதிலும் அதுகுறித்து அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே போலீஸ்காரர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் டேவிட் மார்ஷல் கேட்டுக்கொண்டார். அதோடு சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் மலேசியன் தமிழர் குரல் வழக்கறிஞரின் ஆலோசனையை நாடியிருப்தாக டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.