கோலாலம்பூர், ஏப் 22 – தெக்குன் நேசனல் கடன் தொகையை பெற்ற அனைத்து தொழில் முனைவர்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் இருப்பதை கருத்திற்கொண்டு கடனை திரும்பச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று 2024 Tekun நோன்பு பெருநாள் உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.
உண்மையில், கடன் வாங்கியவர்களில் சிலர் ஒவ்வொரு நாளும் அதனை திரும்பச் செலுத்த முன்வருகிறார்கள். கடனை திரும்ப செலுத்துவதில் அவர்கள் தீவிரமாக முயற்சி செய்வதால் நாங்கள் அவர்களுக்கு அதிக கால அவகாசம் கொடுத்திருக்கிறோம் என ரமணன் தெரிவித்தார். இந்த ஆண்டு கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கையை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்கையும் வைத்துள்ளோம். இந்த இலக்கு வெற்றியடைவதை உறுதிசெய்ய Tekun National தலைவர் Abdullah Sani Abdul Hamid தலைமையின் மீது தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ரமணன் கூறினார். Tekun Nasional லின் கடன் பெற்றவர்களில் 137,520 பேர் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிதியுதவி பாக்கி வைத்துள்ளதாகவும் இந்த ஆண்டு ஜனவரிவரை அந்த தொகை 1.1 பில்லியன் ரிங்கிட்டாக இருந்ததாக கடந்த மார்ச் 2ஆம்தேதியன்று ரமணன் கூறியிருந்தார்.