கோலாலம்பூர், டிசம்பர் 27 – தெக்குன் மற்றும் தெக்குன் ஸ்பூமி கோஸ்பிக் திட்டங்களின் வாயிலாக, 2024 ஆம் ஆண்டில் 2,370 இந்திய வணிகர்கள் நிதியுதவிகளைப் பெற்றுள்ளதாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார்.
இந்திய தொழில்முனைவர்களுக்கு உதவிகரமாகச் செயல்படும் ஸ்பூமி கோஸ்பிக் திட்டத்திற்கு, தெக்குன் நெஷனல் கடந்த ஏப்ரம் மாதம் 3 கோடி ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தது.
அதன் பின்னர், இந்த நிதி ஆறு கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டு, இதுவரை 57.97 மில்லியன் ரிங்கிட் இந்திய வணிகர்களுக்கு உதவியாக வழங்கப்பட்டுள்ளதாக அன்புமணி கூறினார்.
இந்நிதியிலிருந்து இன்னும் 2.1 மில்லியன் ரிங்கிட் எஞ்சியுள்ளதாகவும், அடுத்தாண்டு தொடக்கத்துக்குள் இந்த நிதியும் முழுமையாக பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இன்று தெக்குன் தேசிய திட்டத்தின் கீழ், இரண்டு இந்திய வணிகர்களுக்கு நிதி உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இதில், உதவி பெற்ற Saratha’s Fashion Tailoring நிறுவனத்தின் நிறுவனர் தனது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த வணிகர்களின் வளர்ச்சிக்கான இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்; இந்த உதவிகள் அதிகமான தொழில்முனைவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கும் எனவும் அன்புமணி பாலன் உறுதிபட தெரிவித்தார்.