தென் கொரிய அதிபரைக் கைதுச் செய்யும் முயற்சி தோல்வி; அதிபர் மாளிகையில் பதற்றம்
சியோல், ஜனவரி 3 – ஊழல் தடுத்து ஆணைய விசாரணை அதிகாரிகளுக்கும், அதிபர் மாளிகையின் பாதுகாப்புப் படையினருக்கும் மணிக்கணக்கில் நடந்த வாக்குவாதத்தால்,
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலைக் (Yoon Suk Yeol) கைது செய்யும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது.
யூனை கைதுச் செய்வதற்காக அதிபர் மாளிகைக்குச் சென்ற 5 மணி நேரங்களுக்குப் பிறகு, பிற்பகல் 1.30 மணிக்கு அரசாங்க உயரதிகாரிகளுக்கான லஞ்ச விசாரணைக் குழு அம்முடிவைக் கைவிட்டது.
விசாரணை அதிகாரிகளைப் பாதுகாப்புப் படையினர் தடுத்தி நிறுத்திய வேளை, அதிபரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதும் நிலைமையை மோசமாக்கியது.
எனவே சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்க அம்முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்தக் கட்ட முடிவு குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென விசாரணைக் குழு கூறியது.
டிசம்பர் 3-ல் இராணுவச் சட்டங்களை அமுல்படுத்த முயன்று தோல்வி கண்ட அதிபர் யூன் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேச துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதன் விசாரணைகளுக்கு வருமாறு 3 முறை அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும் அவர் கண்டுகொள்ளாததால், கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிபர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.