தெமெர்லோ, ஏப்ரல் 30 – குடிநுழைத் துறையின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவரை, விடுவிக்க உதவுவதாக கூறி, இடைத்தரகர் போல் ஆள்மாறாட்டம் செய்து மூவாயிரம் ரிங்கிட் பணம் பறிக்க முயன்ற ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
நேற்று காலை மணி ஒன்பது வாக்கில், பாதிக்கப்பட்ட மியன்மார் ஆடவர் ஒருவர் செய்த போலீஸ் புகாரை தொடர்ந்து, 30 நிமிடங்களில், திரங்கானு, சூக்காய் பேருந்து நிலையத்தில், அந்த 35 வயது சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டதை, தெமெர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் மஸ்லான் ஹசான் உறுதிப்படுத்தினார்.
மூவாயிரம் ரிங்கிட் பணத்தை செலுத்தினால், குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட மியன்மார் ஆடவரின் மனைவியை விடுவிக்க உதவுவதாக அவ்வாடவன் கூறி பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
எனினும், பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட அந்த 26 வயதான மியன்மார் ஆடவர் செய்த போலீஸ் புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டான்.
கிளந்தானுக்கு தப்பிச் செல்ல, சூக்காய் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அவன் கைதான வேளை ; அவனிடமிருந்து ஈராயிரத்து 700 ரிங்கிட் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவனதுக்கு எதிராக மூன்று பழைய குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக அவ்வாடவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.