தெலுக் இந்தான் , நவ 22 – அழகு நிலைய கடையில் வேலை செய்த பெண் ஊழியர் ஒருவரின் பிட்டம் மற்றும் உடலை வீடியோவில் பதிவு செய்ததாக மருத்துவர் ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நைடத்துல் அதிரா அஸமான் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 31 வயதுடைய டாக்டர் அமிருல் ஹக்கிம் அயுப் ( Dr Amirul Haqim Ayun ) மறுத்தார். கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி மாலை மணி 6,30 அளவில் தெலுக் இந்தான் , ஜாலான் சங்காட் ஜோங்கிலுள்ள பேரங்காடியிலுள்ள அழகு நிலைய கடையில் 27 வயது பெண்ணின் உடலை தனது கைதொலைபேசியிலுள்ள வீடியோவில் அந்த மருத்துவர் பதிவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் ஐந்து ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும் தண்டனை சட்டத்தின் 509ஆவது விதியின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. அவருக்கு 3,500 ரிங்கிட் ஜாமின் அனுமதித்த மாஜிஸ்திரேட் , டிசம்பர் 30 ஆம்தேதி இந்த குற்றச்சாட்டு மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என்று தெரிவித்தார்.