
தெலுக் பங்லிமா காராங், செப் 6 – தெலுக் பங்லிமா காராங், கேரித் தீவு வட்டச் சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட 10 பேரை போலிஸ் கைது செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 வயது இளைஞர் செய்த புகாரின் அடிப்படையில் 15 முதல் 51 வயதுக்குட்பட்ட அந்த 10 மலேசியர்கள் கைது செய்யப்பட்டதாக குவாலா லங்காட் போலிஸ் தலைவர் Ahmad Ridhwan Mohd Nor தெரிவித்தார்.
புகார் செய்தவர் கேரித் தீவு வட்டச் சாலையில் விபத்து நடந்த இடத்திலிருந்து காரை இழுத்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் குற்றப்புலனாய்வு துறை மேற்கொண்ட விசாரணையின் ஒத்துழைப்போடு 6 சந்தேக நபர்கள் பந்திங்கில் கைது செய்யப்பட்டனர் என்றார் Ahmad Ridhwan.
அந்த 6 பேர் மீது விசாரணை நடத்தியதன் பயனாக மேலும் நால்வர் தெலுக் பங்லிமா காராங்-கில் கைதாகினர்.
நால்வருக்கு ஏற்கனவே போதைப் பொருள் மற்றும் பிற குற்றப் பதிவுகளும் இருந்துள்ளன. சிறுநீரக பரிசோதனையில் இருவர் போதை பொருள் உட்கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிடிப்பட்டவர்கள் அனைவரும் 3 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் ஆருடங்கள் வெளியிட வேண்டாம் என போலிஸ் கேட்டுக் கொண்டுள்ளது.