கோலாலம்பூர், மே-6 – தேசியக் கால்பந்தாட்டக்காரர் Faisal Halim மீது எரிதிராவகம் வீசப்பட்டது தொடர்பில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் கைதாகியுள்ளான்.
விசாரணைக்காக அவனைத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan கூறினார்.
இவ்வேளையில், துப்புத் துலங்கும் பொருட்டு, Faisal உள்ளிட்ட மூவரிடம் இருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையைத் துரிதப்படுத்த, இன்று மேலும் சிலர் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
கோலாலம்பூர் கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடியொன்றில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் Faisal மீது மர்ம நபர்கள் acid தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் Faisal-லை நோக்கி Good Luck எனக் கூறி விட்டு acid-டை வீசிச் சென்றனர்.
அதில் Faisal-லுக்கு இரண்டாம் கட்ட தீப்புண் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Faisal மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கண்டுபிடிக்குமாறு சிலாங்கூர் சுல்தான், ஜொகூர் TMJ, இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே வாரத்தில் தேசியக் கால்பந்தாட்டக்காரர்களை உட்படுத்திய இரண்டாவது சம்பவமாக, Faisal Halim மீது எரிதிராவக வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, Faisal-லின் சகா Akhyar Rashid, குவாலா திரங்கானுவில் கொள்ளையிடப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில், காரில் இருந்து இறங்கிய வேகத்தில் அவரை மர்ம நபர் லட்டியால் தலையிலும் உடம்பிலும் தாக்கி, பணப்பை மற்றும் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தப்பியோடினான்.