
கோலாலம்பூர், ஏப்ரல்-16,உள்ளூர் சீன நாளேட்டின் முதல் பக்கத்தில் கார்ட்டூன் சித்திர வடிவில் வெளியான தேசியக் கொடியில் இடம் பெற்ற தவறு, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றென மாமன்னர் கடிந்துகொண்டுள்ளார்.
ஜாலூர் கெமிலாங் என்பது வெறும் துணியல்ல; மாறாக சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாகும்.
நாடு மற்றும் நாட்டு மக்களின் இறையாண்மையின் சின்னம் அது.
பல்லின மக்களால் பெருமையுடன் நாட்டுப் பற்று மேலோங்க பறக்க விடப்படும் கொடி அது.
Sin Chew Daily நாளிதழின் தவறு நடந்திருக்கக் கூடாது; அதன் நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் மேலதிக கவனத்தோடு இருந்திருக்க வேண்டுமென மாமன்னர் சுட்டிக் காட்டினார்.
நேற்று தனது செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிட்ட கார்ட்டூன் சித்திரத்தில் பிறை நிலவு இல்லாமல் ஜாலூர் ஜெமிலாங் தேசியக் கொடியைத் தவறாக வெளியிட்டு Sin Chew Daily பெரும் சர்ச்சையில் சிக்கியது.
அதற்கு வருத்தம் தெரிவித்த Sin Chew Daily நிர்வாகம், அந்தத் ‘தொழில்நுட்ப தவறு’ உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், திருத்தப்பட்ட படம் இன்றைய பதிப்பில் வெளியிடப்படுமென்றும் கூறியது.
என்ற போதிலும் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆக வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்