
கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 25 – நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இம்மாதம் 31-ஆம் தேதி, புத்ராஜெயாவிலுள்ள, 22 சாலைகள் தற்காலிகமாக போக்குவரத்துக்கு மூடப்படவுள்ளன.
அதிகாலை மணி ஐந்து தொடங்கி, காலை மணி 11 வரையில், சம்பந்தப்பட்ட சாலைகள் கட்டங் கட்டமாக மூடப்படும் என, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜித் தெரிவித்தார்.
தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, 171 போக்குவரத்து அதிகாரிகள் உட்பட ஆயிரத்து 764 அரச மலேசிய போலீஸ் படை உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அலாவுடின் சொன்னார்.
இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவும், கலந்து கொள்ளவும் சுமார் ஒரு லட்சம் பேர் புத்ராஜெயாவில் திரள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாகனம் நிறுத்தும் இடம் மிகவும் குறைவாக உள்ளதால், பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துமாறு வருகையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், அலாவுடின் சொன்னார்.
இ- ஹெய்லிங் வாகனங்கள், மஸ்ஜிட் பெசி, கிப்லாட் வாக், ஜாலான் துன் ஹுசைன் ஆகிய இடங்களில் மட்டும் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றவும் அனுமதி வழங்கப்படும்.
அதனால், அன்றைய நாள் புத்ராஜெயாவில், இலவசமாக ஏற்படுத்தப்படும் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவதாக அலாவுடின் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், தேசிய தினக் கொண்டாட்டத்தின் முன்னேற்பாடுகளுக்காக, இம்மாதம் 27-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரையில், அதிகாலை மணி ஐந்து தொடங்கி காலை மணி 11 வரையில், புத்ராஜெயாவிலுள்ள 18 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்.