கோலாலம்பூர், செப்டம்பர் -3, புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் போது இராணுவ ஹெலிகாப்டரில் பாலஸ்தீன கொடி பறக்க விடப்பட்டதாகக் கூறப்படுவதை, அரசாங்கம் மறுத்துள்ளது.
வைரலாகியுள்ள புகைப்படத்திலிருப்பது உண்மையில் மலேசிய ஆயுதப் படையின் கொடியாகும் என, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ ச்சிங் (Teo Nie Ching) தெளிவுப்படுத்தினார்.
ஆகவே, தவறான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்புவதை விடுத்து, தேசிய தினத்தின் உண்மையான உணர்வான ஒற்றுமையில் கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.
சமூக ஊடகங்களில் எதையும் பகிரும் முன்னர் அது உண்மையான தகவலா இல்லையா என்பதை உறுதிச் செய்திட வேண்டுமென்றும் அவர் நினைவுறுத்தினார்.
தேசிய தின கொண்டாட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ‘No Surrender’ என்ற வாசகம் காட்சிக்கு வைக்கப்பட்டது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலேசியா, பாலஸ்தீனத்தின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததாகும்.
இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் காயமடைந்த பாலஸ்தீனர்களை அரசாங்கம் கடந்த மாதம் சிகிச்சைக்காக இங்கு கொண்டு வந்தது.