டெல்லி, ஆகஸ்ட் 16 – 70ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு சிறந்த படம், ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, ஒலிச்சேர்க்கை என 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர் ரகுமானுக்கும், சிறந்த சவுண்ட் டிசைனருக்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும், ஒளிப்பதிவுக்காக ரவி வர்மனுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், சிறந்த நடிகைக்கான விருது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடன காட்சிகளுக்காக திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.
இந்த முறை, தமிழ் படத்திற்கு 6 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் நான்கு விருதுகளை பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கும், இரண்டு விருதுகள் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கும் கிடைத்துள்ளது.
இதனிடையே, சிறந்த மலையாளத் திரைப்படமாக சவுதி வெள்ளக்காவும், சிறந்த கன்னடத் திரைப்படமாக கேஜிஎஃப்-2 ஆம் பாகமும், சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா-2 ஆம் பாகமும், சிறந்த ஹிந்தி திரைப்படமாக குல்மோஹரும் (Gulmohar) தேர்வு செய்யப்பட்டுள்ளன.