Latestமலேசியா

தேசிய நடவடிக்கை மன்றத்தை ( MAGERAN) பக்கத்தான் ஹரப்பான் நிராகரிக்கிறது

கோலாலம்பூர், ஜூன் 11  –  MAGERAN  எனப்படும்  தேசிய நடவடிக்கை மன்றத்தை அமைக்குமாறு பெஜுவாங் கட்சியின் தலைவர்   துன் டாக்டர் மஹாதீர் முஹம்மட் முன் வைத்த பரிந்துரையை,  பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி நிராகரித்துள்ளது.

அந்த பரிந்துரையை மறுத்து, கெஅடிலான்  கட்சியின் தலைவர்  டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர்  மொஹமட் சாபு, DAP கட்சியின் தலைமைச் செயலாளர்  லிம் குவான் எங்க்  ஆகியோர் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

நாட்டில் தற்போதுள்ள  அவசர காலத்தை  முடிவுக்கு கொண்டு வந்து,  நாடாளுமன்றத்தை விரைவில் திறக்க வேண்டுமெனும்  நிலைப்பாட்டில் பக்கத்தான் ஹரப்பான் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக அம்மூவரும் தெரிவித்தனர்.

கோவிட் பெருந்தொற்றினால் மக்கள் சந்தித்திருக்கும் பிரச்சனைக்கும், பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கும்,  ஜனநாயக முறையிலே நல்ல தீர்வை ஏற்படுத்த முடியும்.

அந்த பிரச்சனைகளை எல்லாம் செவிமடுப்பதற்கு முதலில் நாடாளுமன்றம் திறக்கப்பட வேண்டுமென அவர்கள்,  தாங்கள் வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நேற்று இஸ்தானா நெகாராவில் பேரரசரைச் சந்தித்த டாக்டர் மஹாதீர்  ,  1969 -ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட  தேசிய நடவடிக்கை மன்றத்தை மீண்டும் அமைக்கும்படி பரிந்துரைத்திருந்தார்.

1969 -ஆம் ஆண்டு அந்த மன்றம் தோற்றுவிக்கப்பட்டபோது,  அதற்கு அப்போதைய துணைப் பிரதமர்  துன் அப்துல் ரசாக் தலைமையேற்றார்.
அவர்,  அரசாங்கத்தில் எதிர்கட்சியினரும் இணையும்படி அழைப்பு விடுத்து, அப்போது நிலவிய அரசியல்  நெருக்கடிக்கு தீர்வு கண்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!