பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 11 – குழந்தைகளின் உயர்நிலைச் சிந்தனைத் திறனை அடையாளம் காணும் நோக்கில், தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனைத் திறன் புதிர்ப்போட்டி 2024 நடந்தேறியது.
மலேசிய கல்வி அமைச்சின் அனுமதியுடன், இல்ஹாம் கல்வி கழகம் – டத்தோ ஸ்ரீ ஆறுமுகம் அறவாரியத்தின் ஆதரவுடன், இந்த போட்டி கடந்த டிசம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமையன்று பெட்டாலிங் ஜெயாவின், Brickfields ஆசியக் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில், நாடு முழுவதுமிருந்து இயங்கலை வாயிலாக நடைபெற்ற முதல் சுற்றில் 500 மாணவர்கள் பங்கெடுத்த வேளையில், அதிக புள்ளிகள் பெற்ற 85 மாணவர்கள் இறுதிச் சுற்றில் களம் இறங்கினர்.
இதில், பேராக், சித்தியவான் மகா கணேச வித்தியாசாலை மாணவர் தேசிகன் கணித மேதை இராமானுஜம் விருதினை வென்றார்.
வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதன் விருதினை Haji Manan தமிழ்ப்பள்ளி மாணவர் , எஸ். கவீஷன் பெற்ற வேளை, இயற்பியல் விஞ்ஞானி எஸ்என் போஸ் விருதினை வென்றார் Mak Mandin தமிழ்ப்பள்ளி மாணவி, ஆர். மலர்விழி.
அதேவேளையில், நான்காம் நிலையிலிருந்து 10-ஆம் நிலை வரை வாகை சூடிய மாணவர்களுக்கு 50 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம், நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, Kluang, Haji Manan தமிழ்ப்பள்ளி மாணவர் அறுவர் இறுதிச் சுற்றில் களமிறங்கி; அவர்களில் மூவர் முதல் 10 இடங்களில் வாகை சூடிய நிலையில், அப்பள்ளி திரட்டுப் புள்ளிகள் அடிப்படையில் APJ அப்துல் கலாம் சுழற்கிண்ணத்தை வென்றது.
புதிர்போட்டியின் நிறைவு விழாவில், நாடறிந்த கல்வியாளர் , காலஞ்சென்ற, கு. நாராயணசாமியின் பெயரில், ‘நற்சேவையாளர் விருது’ , அறிமுகப்படுத்தப்பட்டு, அவ்விருது கல்வித்துறையில், குறிப்பாக, கல்வி – தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் , தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள பேராக், செலாமா தமிழ்ப்பள்ளி தொழில்நுட்ப ஆசிரியர், ரூபன் ஆறுமுகத்திற்கு வழங்கி , சிறப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு, மாணவர்களின் சிந்தனை திறனை மட்டுமல்லாமல், கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்புகளை உருவாக்கும் ஆசிரியர்களையும் கௌரவிக்க தகுதியான தளமாக அமைந்தது.