
கோலாலம்பூர், நவம்பர் 9 – தேசிய ரீதியிலான, 2023 அனைத்துலக மனநல தினக் கொண்டாட்டத்தை, சுகாதார அமைச்சு வரவேற்றது.
“மனநலம் அனைவருக்கும் சொந்தம். குழப்பத்தை தவிருங்கள்” எனும் கருப்பொருளில், கடந்த ஞாயிற்றுகிழமை, தலைநகர், டமான்சாராவிலுள்ள, Centre Court The Curve பேரங்காடியில், இவ்வாண்டுக்கான அனைத்துலக மனநல தினம் வரவேற்கப்பட்டது.
மனநலப் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக கருதப்படுகிறது. அது சுகாதார துறையின் மாபெரும் சவாலாகவும் உருவெடுத்துள்ளதாக, அந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்து உரையாற்றிய, சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
உலகளாவிய நிலையில், மனநல பாதிப்புகளுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு அல்லது ஒரு கோடி பேராக அதிகரித்துள்ளதாக, WHO – உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
அதனால், மலேசியர்களிடையே, மனநலம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க, பல்வேறு தளங்கள் வாயிலாக, “குழப்பத்தை தவிர்ப்போம்” இயக்கத்தையும் அந்நிகழ்ச்சியின் போது அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
காலை மணி ஏழு வாக்கில் தொடங்கிய அந்நிகழ்ச்சியில், சுமார் மூவாரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டி விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.