குவா மூசாங், ஆகஸ்ட்-27 – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீது கிளந்தான், குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆகஸ்ட் 14-ம் தேதி, நிந்தனைக்குரிய கருத்தை வெளியிட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், அந்த முன்னாள் பிரதமர் அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார்.
இதையடுத்து 5,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் முஹிடின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு நவம்பர் 4-ங்காம் தேதி மறுசெவிப்புக்கு வருமென நீதிமன்றம் அறிவித்தது.
கிளந்தான் நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முஹிடின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி முன்னதாக வீடியோக்கள் வைரலாகின.
பத்தாவது பிரதமராவதற்கு தமக்குப் போதிய ஆதரவு இருந்தும், அப்போதைய மாமன்னரும் பஹாங் சுல்தானுமான அல் சுல்தான் அப்துல்லா தம்மை அப்பதவிக்கு நியமிக்கவில்லை என முஹிடின் கேலி தோரணையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
பஹாங் அரண்மனை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தரப்புகள் போலீசிஸ் புகார் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.