கோலாலம்பூர், ஏப்ரல் 29 – பெர்சத்து கட்சியின் தொடர்பு குழு உறுப்பினரான சேகுபார்ட் என அழைக்கப்படும் பட்ருல் ஹிஷாம் ஷஹாரினுக்கு எதிராக, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.
பேரரசர் சுல்தான் இப்ராஹிமை அவதூறாகப் பேசியது, தேசத் துரோகக் கருத்துக்களை வெளியிட்டது என அவர் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும், 45 வயது சேகுபார்ட் தமக்கு எதிரான அந்த இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
பேரரசரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கூற்றுகளை வெளியிட்டதாக அவர் முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். இவ்வாண்டு, ஜனவரி 22-ஆம் தேதி மாலை மணி ஆறு வாக்கில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஈராண்டுகள் வரையிலாக சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அதே சமயம், ஏப்ரல் ஆறாம் தேதி, நண்பகல் மணி 12.15 வாக்கில், தலைநகர், செராசில், நிந்தனை பதிவுகளை வெளியிட்டதாக சேகுபார்ட் மற்றொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளார்.
அக்குற்றம் நீருபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறை அல்லது ஐயாயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சேகுபார்ட்டை 20 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை மே 27-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
“அல்லா” காலுறை பிரச்சனை தொடர்பில், கேகே மார்ட் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாகத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் சாய் கீ கானை, நேரில் சந்தித்து விளக்கம் பெற்ற பேரரசருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில், சேகுபார் தனது சமூக ஊடகத்தில் அந்த கூற்றுகளை வெளியிட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.