
ஷா ஆலம், ஆக 21- இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தம்மை பெரும்பான்மை வாக்குகளில் வெற்றியடையச் செய்த வாக்காளர்களுக்கு கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார். மக்கள் அதிகம் கூடும் உணவகங்கள், பேரங்காடிகள் மற்றும் சந்தைகளுக்கு நேரில் சென்று அவர்களுடன் அளவளாவியதோடு தமது இந்த வெற்றிக்கு துணை நின்றதற்காக நன்றியும் அவர் தெரிவித்துக் கொண்டார். இந்நன்றி நவிலும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் தாமான் ஸ்ரீ மூடா, ஆலம் மேகா, கோத்தா கெமுனிங், புத்ரா ஹைட்ஸ், 8வது மைல் புக்கிட் கெமுனிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை மேற்கொண்டார். இந்த வருகையின் போது ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜனும் உடனிருந்தார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் விரைவில் சேவை மையம் அமைத்து தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாம் முனைப்பு காட்டவுள்ளதாக அவர் சொன்னார். இந்த தேர்தலில் பிரகாஷ் 24,288 வாக்குகள் பெரும்பான்மையில் மகத்தான வெற்றி பெற்றார். பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான பிரகாஷூக்கு 41,254 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் சியு ஜி காங்கிற்கு 16,966 வாக்குகளும் பார்ட்டி ராக்யாட் மலேசியா கட்சியின் வேடபாளர் கே. குணசேகரனுக்கு 651 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் வழி கோத்தா கெமுனிங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் குறிப்பாக ஜசெகவின் கோட்டையாக தொடர்ந்து விளங்கி வருவது நிரூபணமாகியுள்ளது.