
கோலாலம்பூர், பிப்ரவரி-7 – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் Dr சாக்கிர் நாயக் குறித்து நாடாளுமன்றத்தில் தாம் பேசியது தொடர்பில், பெர்லிஸ் முஃப்தி காரசாரமாக வீடியோ வெளியிட்டிருப்பது குறித்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வியப்புத் தெரிவித்துள்ளார்.
Dr Maza என பரவலாக அழைக்கப்படும் Mohd Asri Zainul Abdin குறித்து எந்த இடத்திலும் தாம் பேசாத போது, எதற்காக அவர் தம்மை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என தெரியவில்லை என ராயர் சொன்னார்.
என் நெற்றியில் நான் வைக்கும் விபூதி குறித்தும் சம்பந்தமே இல்லாமல் தேவையற்ற கருத்துகளை Dr Maza முன் வைத்துள்ளார் என, இன்று வெளியிட்ட அறிக்கையில் ராயர் கூறினார்.
“மலேசியக் குடிமகன் என்ற முறையில், இஸ்லாம் தான் இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என வரையறுத்துள்ள கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை நான் மதிக்கிறேன்; எனவே, இஸ்லாமிய விவகாரங்களில் குறிப்பாக பெர்லிஸ் விஷயத்தில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை; அது என் வேலையுமல்ல”
ஆனால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எவரிடம் அச்சம் கொள்ளாமல், யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சட்டத்தைக் காக்க வேண்டியது என கடமை என ராயர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், மலேசியாவில் எந்தவொரு சமய சொற்பொழிவும் நிகழ்த்த Dr சாக்கிர் நாயக்கிற்கு 2019-ல் விதிக்கப்பட்ட தடை இன்னமும் அமுலில் உள்ளதா என்ற தனது கேள்விக்கு, தேசியப் போலீஸ் படைத் தலைவர் இன்னமும் பதில் கூறவில்லை.
எது எப்படி இருப்பினும், MP என்ற வகையில் பொது நலன் சார்ந்த விஷயங்களில் பயமோ சாதகமோ இல்லாமல் பேச வேண்டியது தனது கடமை என ராயர் உறுதிப்படக் கூறினார்.
Dr சாக்கிர் நாயக், சொற்பொழிவாற்ற பெர்லிஸுக்கு அழைக்கப்பட்டது குறித்து ராயர் கேள்வி எழுப்பியதால், அவரையும், முஸ்லீம் அல்லாதோர் குறிப்பாக இந்துக்கள் குறித்தும் Dr Maza கடுமையானத் தோரணையில் வீடியோ வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.