பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 11 – மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் தமிழ்க் கல்வி தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
அந்த வகையில் ‘தேவையும் தீர்வும்’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது.
தமிழ்க் கல்வியில் ஏற்படும் முக்கிய சவால்களையும் வாய்ப்புகளையும் இந்த மாநாடு கண்டறியும் என அதன் தலைவர் இளஞ்செழியன் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
தமிழ்க்கல்வியில் தர மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறைகளை ஆராய்தல், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் அதனை தக்கவைப்பதற்கான வழிகளை கண்டறிதல், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் தேர்வுகளுக்கான தமிழ்மொழி, இலக்கியப் பாட போதனையில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளை முன்மொழிதல், என 5 அடிப்படை நோக்கங்களை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக இளஞ்செழியன் குறிப்பிட்டார்.
இந்த மாநாடு தொடர்பான மேல் விவரங்கள் குறித்து மாநாட்டின் இணைத்தலைவர் குமரன் கோரன் பகிர்ந்து கொண்டார்.
இம்மாநாட்டில் அனைவரும் கலந்துக் கொள்வதுடன் தமிழ்க் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று குமரன் கோரன் கேட்டுக்கொண்டார்.தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆறாம் படிவ தமிழ்மொழி ஆசிரியர்கள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உட்பட 800 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவர் என எதிர்பார்க்கப்படுகிறது.